மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவியேற்ற தமிழர்

user 11-Mar-2025 இலங்கை 55 Views

திருகோணமலை (Trincomalee ) மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

கண்டி மேல் நீதிபதி சுமுது பிரேமச்சந்திரா, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பிரியந்த பேர்னாண்டோ மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகிய மூவரும் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் (Jaffna), வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நீதிவான், மாவட்ட நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதியாக அன்னலிங்கம் பிரேமசங்கர் சுமார் 28 ஆண்டுகள் நீதிச் சேவையில் கடமையாற்றியுள்ளார்.

1967ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி யாழ்ப்பாணம், வடமராட்சி, துன்னாலையில் அன்னலிங்கம் (முன்னாள் அத்தியாவசிய சேவைகள் உதவி ஆணையாளர்) மகாலக்ஷ்மி தம்பதியினருக்கு மகனாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர் பிறந்தார்.

துன்னாலை அமெரிக்க மிசன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியில் உயர் கல்வியைத் தொடர்ந்து சட்டத்துறையில் கல்வி கற்று சட்டத்தரணியானார்.

1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நீதித்துறை அலுவலராக நீதிபதி நியமனம் பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களில் ஒரே தடவையில் நீதிவானாகவும் (போர் இடம்பெற்ற காலப்பகுதியில்) மல்லாகம், சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் என யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனைத்து நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாகக் கடமையாற்றியுள்ளார்.

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி