மியான்மாரில் ஐந்து வருடங்களுக்கு பின்னர் நேற்று முதலாம் கட்ட பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. மியான்மார் இராணுவம் 2021 இல் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்த பிறகு முதன்முறையாக இத்தேர்தல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளன.
இத்தேர்தலை மூன்று கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி நேற்று முதல் கட்ட வாக்கு பதிவு இடம்பெற்றதோடு ஜனவரி 11 ஆம் திகதி இரண்டாவது கட்ட வாக்குப்பதிவும் ஜனவரி 25 ஆம் திகதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் இடம்பெற உள்ளது. ஜனவரி இறுதிக்குள் இத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 330 நகரங்களில் நேற்று வாக்களிப்பு இடம்பெற்றது. 65 நகரங்களில் வாக்குப்பதிவு இரத்து செய்யப்பட்டது. இது சுமார் 20 சதவீதத்தினரது வாக்குரிமை மறுக்கப்படுவதாக அமையும் என்று மியான்மாரின் யங்கன் நகரிலுள்ள ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று காலை 6 மணிக்கு வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டன, சூரியன் உதித்தவுடன், ஒப்பீட்டளவில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதை அவதானிக்க முடிந்தது. வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதுடையவர்கள், இளைஞர்களை பெரும்பாலும் காண முடியவில்லை. வாக்குச்சீட்டில், சில தெரிவுகள் மட்டுமே காணப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை இராணுவக் கட்சிகள் என்று அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் சபை, சில மேற்கத்திய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் குழுக்களின் கடுமையான விமர்சனத்திற்கு இத்தேர்தல் உள்ளாகியுள்ளன. அல் ஜசீரா