தேசிய ஒலிம்பிக் குழுவின் நெறிமுறை பிரிவு சமர்ப்பித்த பரிந்துரைகளைத் தொடர்ந்து இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவின் (NOCSL) செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வாவின் பதவியை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, ஒலிம்பிக் தேசிய குழுவின் தலைவர் சுரேஸ் சுப்பிரமணியத்துக்கு, 2024 நவம்பர் 11ஆம் திகதியிடப்பட்ட மின்னஞ்சலில், சர்வதேச ஒலிம்பிக்குழுவின் இணை இயக்குநர் ஜெரோம் போவி (Jerome Poivey) இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
அதில், தேசிய ஒலிம்பிக் குழுவின் அவசரக் கூட்டத்தை கூட்டவும், தாமதமின்றி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
தேசிய ஒலிம்பிக் குழுவின் நிர்வாக பிரச்சினைகள் சர்வதேச ஒலிம்பிக் குழுவின்; செயல்பாடுகள் மற்றும் நற்பெயரை கடுமையாக பாதித்து வருகின்றன.
எனவே தேசிய ஒலிம்பிக் குழு, யாப்பின்படி விரைவாகவும் பொறுப்பாகவும் செயல்பட நேரம் இது என்று சர்வதேச ஒலிம்பிக்குழுவின் இணை இயக்குநர் ஜெரோம் போவி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தமக்கு தெரிந்தவரை, செயலாளர் மெக்ஸ்வெல் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கையில் உள்ள கண்டுபிடிப்புகளின் உண்மைத்தன்மையை, அவர் மறுக்கவில்லை அல்லது சவால் செய்யவில்லை என்று தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஸ் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
எனவே நிறைவேற்று சபையைக் கூட்டி, தேசிய ஒலிம்பிக் குழுவின் யாப்பின்படி, நெறிமுறைகள் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவுள்ளதாக சுரேஸ் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.