இரணைமடுக்குளத்தின் கீழான அமைப்பொன்றின் புதிய நிர்வாகத் தெரிவில் முறைகேடு !

user 14-Dec-2024 இலங்கை 129 Views

கிளிநொச்சி - இரணைமடுக்குளத்திற்கு கீழான புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவில் முறைகேடு இடம்பெற்றுள்ளதால் உரிய ஜனநாயக முறைப்படி மீள்தெரிவினை மேற்கொள்ளுமாறு மாவட்ட அரச அதிபர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்டோரிடம் மனு கையளிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மனுவினை பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று (13.12.2024) கையளித்துள்ளனர். 

கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழான புலிங்கதேவன் முறிப்பு அமைப்பின் ஆயுட்காலம் நிறைவடைந்தும் நீண்டகாலமாக அதன் புதிய நிர்வாகத் தெரிவு மேற்கொள்ளப்படாத நிலையில் இருந்துள்ளது. 

இந்நிலையில், இதற்கான புதிய நிர்வாகத் தெரிவு தொடர்பான அறிவித்தல் கமநல சேவை நிலையத்தால் விடுக்கப்பட்டு, குறித்த நிர்வாகத் தெரிவானது கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 

இருப்பினும், உரிய ஜனநாயக முறைப்படி இத்தெரிவு நடைபெறவில்லை என்றும் இதனை ஜனநாயக முறைப்படி மீள நடத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதாவது, குறித்த பிரதேசத்தில் 587க்கு மேற்பட்ட விவசாயிகள் பயிர் செய்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதும் தெரிவுக்காக பயன்படுத்தப்பட்ட பயனாளிகள் பட்டியலில் 269 பெயரை மாத்திரமே உள்ளடக்கி பாரபட்சமான முறையில் அந்த அமைப்பு தெரிவு செய்யப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

1,800 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்செய்கை பிரதேசத்தைக் கொண்ட இவ்வமைப்பின் கீழ் சுமார் 587 விவசாயிகள் பயிர்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் விவசாயிகளுக்காக வழங்கப்படும் அரச மானியங்களையும் பெற்று வருகின்றனர். 

இவர்களில் 456 விவசாயிகள் தலா 500 ரூபா அங்கத்துவ பணத்தினை செலுத்தியும் வருடாந்த சந்தாவினை செலுத்தியுள்ள போதும் 186 விவசாயிகளின் பெயர்களை இருட்டடிப்பு செய்து முந்தைய நிர்வாகத்தினால் தயாரிக்கப்பட்ட 269 பேரின் பெயர்பட்டியலை வைத்தே வாக்கெடுப்பு மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, இவ்வாறான முறையற்ற தெரிவை உடனடியாக இரத்து செய்து புதிய நிர்வாகத்தினை ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யுமாறு கோரி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கையொப்பமிட்ட மனு ஒன்றினை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இதன்போது, அரச அதிபருக்கான மனுவை உதவிப் பிரதேச செயலாளர் மாவட்ட செயலகத்தில் வைத்து பெற்றுக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜனாதிபதி செயலகம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஆகியோருக்கான பிரதிகளை அனுப்பி வைத்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி