தவெக தலைவர் விஜய் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்க உள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை கோட்டூர்புரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்களுடன் FIR வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜக அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்திருந்தது. தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணையம் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்துகிறது. இரு நாட்களுக்கு முன் ஆளுநர் ஆர்.என்.ரவி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தினார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இன்று பெண்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதனையடுத்து விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று(30.12.2024) பிற்பகல் 1 மணிக்கு சந்திக்க உள்ளதாக ஆளுநர் மாளிகையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. விஜய் பனையூரில் இருந்தே கொண்டே அரசியல் செய்கிறார் என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஆளுநரை சந்திக்க உள்ள நிகழ்வு தமிழக அரசியலில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.