யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை ஆரம்பம் !

user 18-Mar-2025 இலங்கை 68 Views

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை 19 திகதி புதன்கிழமை முதல் எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை வரை - நான்கு நாள்கள் பதின்மூன்று அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில்  நேற்றையதினம்(17) இடம்பெற்றது.

இதன் போது பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றிய விபரங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

வருடந்தம் நடைபெறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு வைபவமானது, பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக அமைவதுடன், ஒவ்வொரு பட்டதாரியினதும் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாகவும் இடம்பிடிக்கின்றது.

இந்தப் பட்டமளிப்பு விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு பொன் விழா ஆண்டு நிறைவில் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

39வது பட்டமளிப்பு விழாவுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிப்பார்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்ப பீடம், இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னை நாள் வவுனியா வளாகத்தைச் (தற்போது வவுனியா பல்கலைக்கழகம்) சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானங்கள் பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் 399 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 686 உள்வாரி மாணவர்களுக்கும், 702 திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 133 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 399 மாணவர்கள் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர்.

 

Related Post

பிரபலமான செய்தி