தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தது தேவையில்லாத வேலை என வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் உணர்ந்துள்ளார்கள் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும், வவுனியா மாநகரசபை வேட்பாளருமான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (19) வேட்பு மனுவை தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு - கிழக்கில் வாக்களித்தார்கள். அது தேவையில்லாத வேலை என தற்போது தமிழ் மக்கள் உணர்ந்துள்ளார்கள்.
எங்களது பிரச்சினைகளை சொல்லக் கூடிய எங்களது பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கக் கூடிய தமிழ் தேசியத்தின் பால் நிற்கும் தமிழ் தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.
குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை விவகாரத்தை தடுக்க எமது தமிழ் தேசியக் கட்சி உறுப்பினர்களை கொண்டு வாருங்கள். அவர்களால் தான் அதனை தடுக்க முடியும்.
தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கும் போது அதற்கு எதிராக அவர்கள் குரல் கொடுக்க மாட்டார்கள்.
எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.