சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு

user 24-Jan-2025 இந்தியா 109 Views

ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கக் கோரி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சிபிஐ இன்று (வெள்ளிக்கிழமை) மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சஞ்சய் ராய்க்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனை போதுமானதாக இல்லை என்று கூறி மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), உயர் நீதிமன்ற நீதிபதிகள், டெபாங்ஷூ பசாக் மற்றும் எம்டி ஷப்பர் ரஷிதி அடங்கிய அமர்வு முன்பு இன்று மேல் முறையீட்டு மனுவினைத் தாக்கல் செய்தது.

இதற்கு பதில் அளித்த நீதிமன்ற அமர்வு, "இதே கோரிக்கையுடன் மாநில அரசும் மனு ஒன்றினைத் தக்கல் செய்துள்ளது, அதனுடன் சேர்த்து சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவும் வரும் ஜன.27-ம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என்று தெரிவித்தது.

முன்னதாக, மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் (31) கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த கொடூர கொலை தொடர்பாக, காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு மீதான விசாரணை கொல்கத்தாவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் 81 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 50 பேரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி சிபிஐ தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ மாணவர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சஞ்சய் ராய் மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 9-ம் தேதி அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி அனிபர் தாஸ் கடந்த 18-ம் தேதி தீர்ப்பினை வழங்கினார். அப்போது, சிபிஐ முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் ஜன. 20-ம் அறிவிக்கப்பட்டது.

ஜனவரி 20 அன்று, "குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இதன்மூலம் அவர் தனது வாழ்வின் கடைசி நாள் வரை சிறையில் இருப்பார். மேலும் அவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது." என்று தீர்பளித்திருந்தார்.

Related Post

பிரபலமான செய்தி