காசாவில் உயிர்வாழ்வதற்கான குறைந்த சந்தர்ப்பங்களுடன் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள மக்கள்!

user 21-Nov-2024 சர்வதேசம் 98 Views

இஸ்ரேலியப் படைகளால் முற்றுகையிடப்பட்ட வடக்கு காசாவின் சில பகுதிகளில் பாலஸ்தீனியர்கள் உயிர்வாழ்வதற்கான குறைந்தளவான சந்தர்ப்பங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 நாட்களில் கிட்டத்தட்ட எந்த உதவியும் இந்த பகுதிக்கு வழங்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இந்த மாதம் குறித்த பகுதிகளில் வசிக்கும் 65,000 முதல் 75,000 பேருக்கு உதவியளிக்கும் அனைத்து முயற்சிகளும் மறுக்கப்பட்டன அல்லது தடை செய்யப்பட்டன.

இதனால் வெதுப்பகங்கள் மற்றும் உணவகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. எனவே, வடக்கு காசாவின் பகுதிகளில் பஞ்சம் ஏற்படுவதற்கான வலுவான ஏதுநிலைகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

காசாவின் வடக்கு பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்கள் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 100,000 முதல் 130,000 பேர் வரை காசா நகரத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

எனினும், அங்கு தங்குமிடம், நீர் மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய ஆதாரங்கள் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலக பணியாளர்கள், நவம்பர் 1 மற்றும் 18க்கும் இடையில் வடக்கு காசாவில் முற்றுகையிடப்பட்ட பகுதிகளுக்கு 31 பயணங்களை திட்டமிட்டிருந்தனர். எனினும் இதில் இருபத்தேழு பயணங்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டன.

மற்றைய நான்கு பயணங்கள் கடுமையாகத் தடைப்பட்டன. இந்தநிலையில், அங்கு மூன்று மருத்துவமனைகளுக்கான அணுகல் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவமனைகளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை முதல், 17 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்துள்ளனர்.

மேலும், ஒரு முதியவர் கடுமையான நீரிழப்பு காரணமாக இறந்துள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஐக்கிய நாடுகளின் இந்த கருத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. 

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி