தாயகத்தில் மாவீரர் தின வாரம் தொடங்கியுள்ளது. மக்கள் இந்நிகழ்வுகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. இருப்பினும் இந்நிகழ்வுகளில் தங்களின் தலைகளை காண்பித்து அரசியல் ஆதாயம் தேட முனையும் அரசியல்வாதிகளின் ஏற்பாட்டிலும் ஆங்காங்கே மாவீரர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உண்மையில் இத்தகைய பிரம்மாண்ட மாவீரர் தின நிகழ்வுகள் உணர்ச்சி பெருக்கோடும் ஆத்மார்த்தமாகவும் பின்பற்றப்படுகின்றதா என்றால் இல்லை என்றே கூறலாம்.
இம்மாவீரர் தின நிகழ்வுகள் தற்போது எமது தமிழ் அரசியல்வாதிகளினால் முற்றிலும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் உள்வாங்களின் காரணமாக இப்புனித நினைவுகள் அரசியல் கறைபடிய தொடங்கியுள்ளன என்பதை யாராலும் மறக்க முடியாது.
இவ்வளவு வருட காலமும் தமிழ் அரசியல் தலைமைகள் எமது மக்களின் வலிகளை வைத்து அரசியல் செய்து கொண்டு இருந்தார்களே தவிர அவர்களின் அரசியலினால் எமது மக்களுக்காக அவர்கள் எதையும் சாதித்ததாக வரலாறு இல்லை. தமிழ் அரசியல் தலைமைகள் இன்றைய நாட்களில் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு சென்று தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதாக புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள முனைகிறார்கள் ஆனால் உண்மையில் மாவீரர் தின ஏற்பாட்டு குழுவினரிடம் ஒரு சில தமிழ் அரசியல் கட்சிகள் சென்று நாங்கள்தான் இதனை முன்னெடுக்க வேண்டும் என சண்டைப் பிடித்துள்ளார்கள். மாவீரர் தின நிகழ்வுகளை தாயகத்திலுள்ள யார் வேண்டுமானாலும் அனுஸ்டிக்கலாம் அது அரசியல்வாதிகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.உண்மையில் இழப்புகளின் வலி சுமந்து நிற்கும் எமது உண்மையான உறவுகளுக்கு சொந்தமானது.
மாவீரர்களின் பெற்றோர்களையும் குடும்பங்களையும் கௌரவிப்பதாக கூறி புலம்பெயர் நாடுகளிலிருந்து பணத்தினை பெற்றுக் கொள்ளும் எமது தமிழ் அரசியல்வாதிகள் சிறு உதவிகளை மாத்திரம் செய்துவிட்டு மீதம் இருப்பதை தங்களின் சட்டை பைக்குள் சுருட்டி கொள்கிறார்கள். புலம்பெயர் தமிழுறவுகள் விழிப்படைய வேண்டும். நீங்கள் எமது போராளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவி நல்க வேண்டுமெனில் நேரடியாகவே உதவிகளை வழங்குங்கள். இத்தகைய அரசியல் கள்வர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறாதீர்கள் இது உங்களிடம் நாங்கள் வைக்கும் ஒரு கோரிக்கையாகும்.
தமிழ் அரசியல் தலைமைகளே ! கடந்த தேர்தலில் எமது மக்கள் உங்களுக்கு சரியான பாடத்தை கற்பித்து விட்டார்கள் .இனிவரும் காலமாவது சற்று தேறி வாருங்கள். ஏமாற்று வித்தை அரசியல் எல்லாம் இனி இங்கு எடுபடாது , இனவாத அரசியலும் இங்கு இனி எடுபடாது. மக்கள் தெளிந்துவிட்டார்கள். இன்னமும் மீதம் இருக்கும் ஒரு சில புல்லருவிகளை அனுப்பிவிட்டால் போதும் தாயகம் முற்றிலும் சுத்தமாகிவிடும். தயவுசெய்து உங்களிடம் கூற விளைவது ஒன்றே ஒன்றுதான் நிகழ்வுகளை தயவு செய்து உங்களின் அரசியல் மேடையாக்காதீர்கள்.