அமெரிக்காவிலிருந்து(USA) அண்மையில் பாகிஸ்தானுக்கு தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்த ஒருவர், தனது மகளின் டிக்டொக் காணொளிகளை ஏற்காமையால், அவரை கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அத்துடன் தாமே தமது மகளை கொலை செய்ததாக அவர் பொலிஸாரிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தென்மேற்கு நகரமான குவெட்டாவில் வைத்து, தனது மகள் ஹிராவை தாமே, சுட்டுக் கொன்றதாக அன்வர் உல்-ஹக் என்ற குறித்த பாகிஸ்தானியர் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனினும் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னால் அடையாளம் தெரியாத சில ஆண்கள் இருப்பதாக, அவர் ஆரம்பத்தில் புலனாய்வாளர்களிடம் கூறியிருந்த நிலையில் அமெரிக்க குடியுரிமை பெற்ற குறித்த பாகிஸ்தானியரான தந்தை, தனது மகளின் பதிவுகள் ஆட்சேபனைக்குரியவை என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில் இது கௌரவக் கொலை என்ற அர்த்தத்தில் மேற்கொள்ளப்பட்டதா? என்று பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் - அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் - கௌரவக் கொலைகள் என்று அடிப்படையில் கொலை செய்யப்படுகின்றனர் என்று மனித உரிமைகள் குழுக்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கொலைகள் பொதுவாக தங்கள் குடும்பத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காகச் செய்யப்படுகின்றன. இதேவேளை கொலை செய்யப்பட்ட ஹிராவின் குடும்பம் அமெரிக்காவில் 25 வருடங்களாக வசித்து வந்த நிலையில் அண்மையிலேயே தாயகம் திரும்பியது.
எனினும் பாகிஸ்தானுக்குத் திரும்புவதற்கு முன்பே, ஹிரா டிக்டோக்கில் காணொளிகள் வெளியிடுவதை ஆரம்பித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அவரின் கொலை தொடர்பாக அவரது தந்தையின் மைத்துனரும் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு கௌரவக் கொலை எனக் கண்டறியப்பட்டு, அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.