உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் திகதியில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை, பாதீட்டு விவாதம் மற்றும் பல்வேறு சமய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஏனையவர்களின் ஆலோசனைகளையும் கவனத்தில் கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுமானால் சிறப்பாக இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.