2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (01) நடைபெற்ற குவாலிஃபையர் 2 போட்டியில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை 05 விக்கெட்டுகளினால் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியானது,18 ஆண்டுகால ஐ.பி.எல். வரலாற்றில் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
ஜூன் 3 ஆம் திகதி (நாளை) நடைபெறும் இறுதிப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும்.
இந்த ஆட்டத்தின் முடிவுடன் 2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரனாது ஒரு புதிய சாம்பியனை காணும்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தனது சிறந்த இன்னிங்ஸில் (41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்கள்) பஞ்சாப் அணியை 204 ஓட்டங்களை ஆறு பந்துகள் மீதமுள்ள நிலையில் துரத்த உதவினார்.
அவரது துணிச்சலும் திறமையும் இந்த இன்னிங்ஸில் முழுமையாக வெளிப்பட்டதுடன் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கும் அழைத்துச் சென்றது.
அவரது அதிரடியான சிக்ஸர்கள் இந்த இன்னிங்ஸில் வெளிப்பட்டதுடன், ஜஸ்பிரித் பும்ராவின் யோர்க்கர்களை அடித்து, போட்டியை மும்பையின் பிடியிலிருந்து கைப்பற்றினார்.
ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் எட்டு சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பவுண்டரிகளுடன் 87 ஓட்டங்களை எடுத்தார்.
அவரது ஸ்ட்ரைக் ரேட் 212.20 ஆக இருந்தது.
இந்த ஆட்டத்தில் அவர், இதுவரை சீசனில் விளையாடாத நெஹல் வதேராவுடன் இணைந்து, நான்காவது விக்கெட்டுக்கு 47 பந்துகளில் 84 ஓட்டங்கள் கூட்டணியை உருவாக்கி ஆட்டத்தை மாற்றியமைத்தார்.
அதேநேரம், ஹார்டிக் பாண்டியா மற்றும் அவரது வீரர்களுக்கு, இது ஒரு இதயத்தை உடைக்கும் வெளியேற்றமாகும்.
சீசனின் இரண்டாம் பாதியில் ஒரு துணிச்சலான மறுபிரவேசத்தை மேற்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தது.
முதல் ஆறு ஆட்டங்களில் ஐந்தில் தோல்வியடைந்த அவர்கள், கடைசி எட்டு ஆட்டங்களில் ஏழில் வெற்றி பெற்று பிளேஆஃப்களுக்குள் நுழைந்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டரில் அவர்கள் உறுதியாக இருந்தனர், ஆனால் இறுதியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூ அணியுடனான தோல்விக்கு பின்னர் அழுத்தத்தை சிறப்பாகக் கையாண்ட பஞ்சாப் அணிக்கு எதிராக அவர்கள் முழு பலத்துடன் செயல்பட்டனர்.
அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துப் பரிமாற்றத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தார்.
இதற்கிடையில் மழை பெய்ததன் காரணமாக ஆட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் 7.30 மணியளவில் தொடங்க வேண்டிய ஆட்டம் சுமார் 2.15 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.
இதையடுத்து மும்பை அணி முதலாவதாக துடுப்பாட்டம் செய்தது.
அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஜோனி பேர்ஸ்டோ களமிறங்கினர்.
ரோகித் சர்மா 8 ஓட்டங்களில் பிடிகொடுத்து வெளியேறிய நிலையில், அடுத்து வந்த திலக் வர்மாவுடன் பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி சற்று நிதானமாக துடுப்பெடுத்தாடி ஓட்ட சேகரிப்பில் ஈடுபட்டது.
பின்னர், பேர்ஸ்டோ 38 ஓட்டங்களில் ஜோஸ் இங்கிலிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா, 29 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து, ஹர்திக் பாண்டியா 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடி அரைசதம் நோக்கி முன்னேறிய சூர்யகுமார் யாதவ், 44 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நேஹல் வதேரா பந்துவிச்சில் விக்கெட்டை இழந்தார்.
7 பவுண்டரிகளை விளாசிய நமன் திர், 18 பந்துகளில் 37 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களை எடுத்தது.
இதையடுத்து 204 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்த விக்கெட்டுக்கு ஜோஷ் இங்கிலிஸ் களமிறங்கினார்.
மற்றொரு தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஷரேயாஸ் ஐயருடன் ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி சேர்ந்தார்.
5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 38 ஓட்டங்கள் சேர்ந்த ஜோஷ் இங்கிலிஸ், ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்று விக்கெட் காப்பாளர் பேர்ஸ்டோவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
இதையடுத்து நேஹல் வதேரா-ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
பின்னர், அரைசதம் நோக்கி முன்னேறிய நேஹல் வதேரா (4 பவுண்டரி, 2 சிக்ஸர்) 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் ஷரேயாஸ் ஐயர், 27 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
இறுதிவரை நிலைத்து நின்று அதிரடி காட்டிய ஷரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 87 ஓட்டங்களை பெற்றார்.
இறுதியில் பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்களை குவித்தது.
மும்பை அணியில் அஸ்வணி குமார் 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் டிரெண்ட் போல்ட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவானர்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணியை வீழ்த்திய பஞ்சாப் அணி 11 ஆண்டுகளின் பின்னர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
நாளை (03) நடைபெறும் 2025 ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோத உள்ளது.