யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றம் சென்ற முதல் நாளிலேயே சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதுடன், இந்த சம்பவம் சிங்கள ஊடகங்களிலும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10 மணிக்கு சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றது.
இதன்போது, சபாநாயர், பிரதி சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதன்போது, வைத்தியர் அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவரது ஆசனத்தில் சென்று அமர்ந்துள்ளார். உடனடியாகவே நாடாளுமன்ற ஊழியர்கள் இது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம் எனவே அந்த இடத்திலிருந்து நகருமாறு தெரிவித்தபோதும் அவர் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளன்று, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகள் ஆகியோருக்கு சம்பிரதாயபூர்வமாக ஒதுக்கப்பட்ட ஆசனங்களைத் தவிர்ந்த ஏனைய ஆசனங்களில் அமர முடியும்.
இவ்வாறான நிலையில், வைத்தியர் அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு நாடாளுமன்ற ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விடயம் சிங்கள ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேறொரு ஆசனத்தில் அமர்ந்தமை குறிப்பிடத்தக்கது.