யாழ்ப்பாண பல்கலைக்கழக (University of Jaffna) துணைவேந்தர் உட்பட மூவருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பல்கலைக் கழகத் துணைவேந்தர் சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக குறித்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக 4ஆம் வருட சட்டத்துறை மாணவன் சி.சிவகஜன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கு.குருபரன் மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பல்கலைக்கழகத் துணைவேந்தரால் சட்டத்துறை மாணவன் சிவகஜனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.
இந்த வகுப்புத் தடை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கலைப்பீடாதி ரகுராம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய விதிக்கப்பட்டுள்ளது என்று துணைவேந்தரால் மாணவனுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வகுப்புத் தடையைச் சவாலுக்குட்படுத்தியே சட்டத்துறை மாணவன் சிவகஜனால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தன்மீது பாரதூரமான அவதூறை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு சிவகஜன் செவ்வி வழங்கினார் என்று ரகுராம் துணைவேந்தரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாடு கலைப்பீடாதிபதி ரகுராம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த மறுநாளே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.