அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கைது !

user 18-Mar-2025 இந்தியா 99 Views

தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஸ்மாக்) மதுபான ஊழலுக்கு எதிராக இன்று (17) திட்டமிட்ட போராட்டத்திற்கு முன்னதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 11 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம், போராட்ட இடத்தை அடைவதற்கு முன்பே தலைவர்கள் வீட்டுக் காவலில் கைது செய்யப்பட்டனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டனர்.

தனது தடுப்புக்காவல் குறித்து பேசிய சௌந்தரராஜன்,

அவர்கள் எங்களை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. எனது 300 காரியகர்த்தாக்கள் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் வெளியே செல்வதை அவர்கள் விரும்பவில்லை.

டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் 1,000 கோடி (இந்திய ரூபா) ஊழலை நாங்கள் கண்டிக்கிறோம்.

நான் வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும், ஆனால் அவர்கள் என்னை அதைச் செய்ய அனுமதிக்கவில்லை” என்றார்.

இந்தக் கைதுகளைக் கண்டித்து, திமுக அரசு பயத்தில் செயல்படுவதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள பதிவில் அவர்,

“பயத்தால் நடுங்கும் திமுக அரசு, அதன் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளை போராட்டத்தில் பங்கேற்க விடாமல் வீட்டுக் காவலில் வைத்துள்ளது.

ஜனநாயக ரீதியாக நாங்கள் போராட்டத்தை அறிவித்ததாலா நீங்கள் இதுபோன்ற கோழைத்தனமான செயல்களில் ஈடுபடுகிறீர்கள்? திகதி அறிவிக்காமல், திடீரென்று ஒரு நாள் போராட்டம் நடத்தினால் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஸ்மாக்) சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் மதுபான ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED) தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதிக விலை நிர்ணயம், கையூட்டு மற்றும் ஊழல் தொடர்பாக மூன்று குற்றப் பத்திரிகைகளை ED பதிவு செய்துள்ளது.

இதில் டாஸ்மாக் நடவடிக்கைகளில் ரூ.1,000 கோடி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் தமிழ்நாடு முழுவதும் பல சோதனைகளை இந்த நிறுவனம் நடத்தியது.

இந்தக் குற்றச்சாட்டுகளை திமுக அரசு கடுமையாக மறுத்து, அவற்றை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று நிராகரித்துள்ளது.

பாஜகவின் இந்தப் போராட்டம் சர்ச்சையைத் தூண்டும் முயற்சி என்றும், எதிர்க்கட்சிகள் தலைமையிலான மாநிலங்களை மத்திய அமைப்புகள் குறிவைப்பதாகவும் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

 

Related Post

பிரபலமான செய்தி